Published : 04 Mar 2024 01:18 PM
Last Updated : 04 Mar 2024 01:18 PM
சென்னை: பாஜக தேசிய தலைமைக்கு வரும் 6 ஆம் தேதி உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் குழு கூட்டத்தில் எந்தெந்த மாநிலங்கள் கலந்து கொண்டன என்பதைப் பார்த்தீர்கள். 195 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பிஹார், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் பங்கேற்கவில்லை. மத்திய தலைமை ஒவ்வொரு கட்டமாக எந்தெந்த மாநிலத்தை அழைக்க வேண்டும் என முடிவு செய்யும்.
பாஜக வேட்பாளர் பட்டியலை தயாரிக்க மாநில தேர்தல் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கும் தேர்தல் குழு அமைக்கப்படும். அதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தலைவர்கள் பங்கு பெறுவார்கள். அந்தக் குழுவானது உத்தேசப் பட்டியலுடன் வரும் 6 ஆம் தேதி தேசிய தலைமையை சந்திக்க உள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை அடையாளம் காண ஒவ்வொரு தொகுதிக்கும் நிர்வாகிகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில், தமிழகத்துக்கு மட்டும் தாமதமானதா என்று கேட்டால் அது கிடையாது. வேண்டுமென்றே தமிழகம் தாமதிக்கப்படுகிறதா என்று கேட்டால் கிடையாது. பிரதமரின் நேரத்துக்கு ஏற்ப அவை நடக்கின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு அரசியல் கட்சியாக அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் எங்களுடைய பணிகள் இருக்கின்றன. அதற்காகதான் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும், அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். எங்களுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. நாங்கள் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களும் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT