Last Updated : 04 Mar, 2024 01:12 PM

2  

Published : 04 Mar 2024 01:12 PM
Last Updated : 04 Mar 2024 01:12 PM

சிவகங்கையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம்: கார்த்தி சிதம்பரம் ‘கை’ ஓங்கியது!

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: காங்கிரஸ் நகர நிர்வாகிகள் மாற்றப்பட்டு, கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டதால் சிவகங்கை மாவட்டத்தில் அவரது ‘கை’ ஓங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தனக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை மாற்ற மாநிலத் தலைமையை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தி வந்தார். ஆனால், அதை அப்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து அவர் தனது தந்தை ப.சிதம்பரம் மூலம் தேசிய தலைமையிடம் காய் நகர்த்தி, கடந்த ஆண்டு செப்டம்பரில் சத்திய மூர்த்தியை மாற்றிவிட்டு தனது ஆதரவாளரான சஞ்சய் காந்தியை மாவட்டத் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.

இதனிடையே கார்த்தி சிதம்பரத்துக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் தரக் கூடாது எனக் குரல் கொடுத்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக சில நகர, வட்டார நிர்வாகிகள் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் தனக்கு எதிராகச் செயல்பட்ட நகர, வட்டார நிர்வாகிகளை மாற்ற முயற்சி எடுத்தார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார் பரிந்துரையில், சிவகங்கை மாவட்டத்தில் 6 நகரத் தலைவர்களை மாற்றிவிட்டு, கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்களை மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று நியமித்தார்.

அதன்படி புதிய நகரத் தலைவர்களாக சிவகங்கைக்கு விஜயகுமார், மானா மதுரைக்கு புருஷோத்தமன், திருப்பத்தூருக்கு சீனிவாசன், கோட்டையூருக்கு பழனியப்பன், தேவகோட்டைக்கு சஞ்சய், புதுவயலுக்கு முகமது மீரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் கார்த்தி சிதம்பரத்தின் ‘கை’ ஓங்கியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், மாவட்டத் தலைவரை மாற்றினால் தனக்கு எதிர்ப்பு குறையும் என கார்த்தி சிதம்பரம் நினைத்தார். இதனால் மற்ற நிர்வாகிகளை மாற்ற நினைக்கவில்லை. எனினும் தொடர்ந்து சிலர் அவருக்கு எதிராகவே செயல்பட்டனர். இது மக்களவைத் தேர்தலில் தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கார்த்தி சிதம்பரம் கருதினார்.

இதையடுத்து கட்சித் தலைமை மூலம் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை மாற்றிவிட்டு, ஆதரவாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x