Published : 04 Mar 2024 04:49 AM
Last Updated : 04 Mar 2024 04:49 AM

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை - பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மேடை.

சென்னை/ கல்பாக்கம்: தமிழகத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்து சென்றார். 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற மோடி, நிறைவாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுபேசினார். இந்நிலையில், இந்த ஆண்டில் 4-வது முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.

மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு இன்று மதியம் 2.45 மணிக்கு விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் செல்கிறார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு மாலை 5 மணி அளவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். ஜிஎஸ்டி மற்றும் அண்ணா சாலையில் பிரதமரை வரவேற்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முன்னிலைப்படுத்தி ‘மக்கள் காவலன்’ என்ற வாசகத்துடன் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரொட்டிகளும் அதிக அளவில்வைக்கப்பட்டுள்ளன.

மோடிக்கு சாலையில் வரவேற்பு அளிக்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும், காரில் வரும்போது அவர், மக்களை சந்திக்கவும், அப்போது மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்எம்சிஏ மைதானத்திலும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வருகின்றனர். மாநாட்டுஏற்பாடுகளை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் ஆகியோர் முன்னின்று கவனித்து வருகின்றனர். விழுப்புரம் பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 144 தடை உத்தரவு: பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

முக்கிய சாலைகள், சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை நடந்துவருகிறது. சென்னை விமான நிலையம், பொதுக்கூட்டம் நடக்கும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் உள்ளிட்ட இடங்களில் சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில்15,000 போலீஸார்: 5 அடுக்கு பாதுகாப்பு - பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கவனித்து வருகிறார். கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) நேரடி மேற்பார்வையில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த போலீஸார் மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் உட்பட மொத்தம் 15,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதேபோல, கல்பாக்கத்தை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான சட்ராஸ், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம் குப்பம், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x