Published : 04 Mar 2024 05:17 AM
Last Updated : 04 Mar 2024 05:17 AM

தமிழகம் முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து: விடுபட்டவர்களுக்கு வீடு வீடாக வழங்க ஏற்பாடு

சென்னை: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் நேற்று நடந்த முகாமில், 5 வயதுக்கு உட்பட்ட 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்தியாவில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘அன்பார்ந்த பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். போலியோ இல்லாத சமுதாயம் தொடர, 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள். நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்துக்கான ஒளி’ என்று தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் முகாம் நடந்தது. சென்னை சைதாப்பேட்டை ஐந்துவிளக்கு பகுதியில் நடந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சென்னை மாநகராட்சி துணை மேயர் முகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம், ஊரகநலப் பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், உலக சுகாதார நிறுவன அமைப்பின் உறுப்பினர்களான சுரேந்திரன், ஆஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட், பொம்மைகள் கொடுத்தும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக ரயில், பேருந்து, விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

எளிதில் வந்து செல்ல முடியாத தொலைதூர பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் சென்று சொட்டு மருந்து வழங்கினர். இப்பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் மருந்து வழங்கப்பட்டது.

மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.சென்னையில் 1,646 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் 7 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்தும், இந்தியாவில் 2014-ம் ஆண்டில் இருந்தும் போலியோ இல்லாத நிலை உள்ளது. இதே நிலை நீடிக்கும் நோக்கில் சுகாதாரத் துறை, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம், பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளில் 56.34 லட்சம் (98.18 சதவீதம்) பேருக்கும், சென்னையில் 5.53 லட்சம் குழந்தைகளில் 5.27 லட்சம் (95.26 சதவீதம்) பேருக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்தை வழங்குவார்கள். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x