Published : 04 Mar 2024 04:04 AM
Last Updated : 04 Mar 2024 04:04 AM
தூத்துக்குடி: பாலக்காடு - திருநெல்வேலி இடையே பயணிக்கும் பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை ரயில் இயக்கப்படவில்லை.
இதுபோல தூத்துக்குடி - கோவை இணைப்பு ரயிலுக்கு பதிலாக தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ரயிலும் இதுவரை இயக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வந்த போது இந்த ரயில்களை தொடங்கி வைப்பார் என பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை.
பாலருவி ரயில்: பாலக்காடு - திருநெல்வேலி இடையே தினமும் இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்த ரயிலுக்கான எண்கள் மற்றும் கால அட்டவணை அறிவிக்கப் பட்டது. சுமார் 4 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தனர். ஆனால், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படவில்லை.
மேட்டுப் பாளையம் ரயில்: இதேபோல் கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி - கோவை இணைப்பு ரயிலுக்கு மாற்றாக தூத்துக்குடி- மேட்டுப் பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த ரயில் இதுவரை இயக்கப்படவில்லை. இதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் இயக்கப்பட்டு விட்ட நிலையில் தூத்துக்குடிக்கான பாலருவி ரயில் நீட்டிப்பு மற்றும் மேட்டுப் பாளையம் புதிய ரயில் ஆகியவை மட்டும் இன்னும் நடைமுறைக்கு வராதது தூத்துக்குடி மாவட்ட பயணிகளை மிகுந்த ஏமாற்றமடைய செய்துள்ளது.
தேர்தலுக்கு முன் - இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இயக்கப்படாத தூத்துக்குடி - பாலக்காடு ரயில் மற்றும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் புதிய ரயில் ஆகிய இரு ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி வந்த போது தொடங்கி வைப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தொடங்கி வைக்கப்படவில்லை. இது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த இரு ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சில புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிகிறது. அப்போது இந்த ரயில்களையும் அவர் தொடங்கி வைக்க வேண்டும்.
மும்பை ரயில்: தூத்துக்குடி- மும்பை இடையே முதல் முறையாக கடந்த மே, ஜூன் மாதங்களில் கோடை கால வாராந்திர சிறப்பு ரயிலை மத்திய ரயில்வே இயக்கியது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த ரயில் தூத்துக்குடி- மும்பை வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலாக அறிவிக்கப்பட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இயக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்த ரயிலை நிறுத்தி விட்டனர். தூத்துக்குடி மாவட்ட பயணிகளுக்கு மிகுந்த பயனாக இருந்த மும்பை- தூத்துக்குடி வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக தொடர்ந்து இயக்க வேண்டும்.
வந்தே பாரத் இணைப்பு: திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் வகையில் இணைப்பு ரயில்களை இயக்க வேண்டும். விருதுநகரில் இருந்து திருச்சிக்கு அருப்புக்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்தால் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க வசதியாக இருக்கும். அதுபோல வந்தே பாரத் ரயிலுக்காக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு இணைப்பு ரயிலை இயக்கினால், அந்த பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். இந்த கோரிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT