Published : 03 Mar 2024 03:59 PM
Last Updated : 03 Mar 2024 03:59 PM
கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள சாத்தனின் சமையலறை(டெவில்ஸ் கிச்சன்) என அழைக்கப்படும் குணா குகை யில் சுற்றுலாபயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் காண வருகின்றனர். பல உயிர்களை தன்னுள் ஈர்த்துக்கொண்ட குணா குகையின் வரலாறு இன்றைய தலைமுறையினருக்கு தெரியும் வகையில் வெளிவந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் தான் இதற்கு காரணம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களான மோயர் பாய்ண்ட், பைன் பாரஸ்ட், தூண்பாறை, சாத்தானின் சமையலறை என அழைக்கப்படும் குணா குகை, மன்னவனூர் சூழல் சுற்றுலாத்தலம், பேரிஜம் ஏரி ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பகுதிக்கு செல்ல கட்டுபாடுகளுடன் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இவற்றில் முக்கியமான சுற்றுலாத்தலமாக கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆங்கிலேயேர் காலத்தில் சாத்தானின் சமையலறை என அழைக்கப்பட்ட பகுதி, பின்னாளில் அப்பகுதியில் படம் பிடிக்கப்பட்ட ‘குணா’ என்ற கமல் நடித்த திரைப்படத்திற்கு பிறகு குணா குகை என்று அழைக்கப்பட்டு சுற்றுலாபயணிகளின் கவனத்தை ஈர்த்தது.
சாத்தானின் சமையலறை: ஆபத்து மிகுந்த இந்த பகுதி 1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவரால் கண்டறியப்பட்டது. பாறைகளுக்கிடையே பிளவு அதன் வழியாக சென்றால் இருண்ட குகை பகுதி, அதில் வாழும் ராட்சத வவ்வால்களின் சத்தம், ஆங்காங்கே குகைக்குள் ஊடுருவும் ஒளி என திகிலூட்டும் வகையில் இருந்ததால் இந்த பகுதியை ‘சாத்தானின் சமையலறை’ என நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கொடைக்கானலில் வசித்த ஆங்கிலேயேர்கள் அழைத்து வந்தனர்.
சுற்றுலாபயணிகளை ஈர்த்த குணா குகை: காலப்போக்கில் சுற்றுலாபயணிகளை ஈர்க்காமலேயே இருந்த இந்த பகுதியில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல் நடித்த ‘குணா’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆழமான குகைப்பகுதிக்குள் சென்று படம் பிடித்தனர். இந்த படம் வெளியான பிறகு சுற்றுலாபயணிகள் அதிகம் சென்றுவரத் துவங்கினர். இதையடுத்து ‘சாத்தானின் சமையலறை’ பகுதி காலப்போக்கில் ‘குணா குகை’ என்று அழைக்கப்பட்டு, அதுவே நிரந்தர பெயராகவும் நிலைத்துவிட்டது. இளைஞர்கள் இந்த குகை பகுதிக்கு சென்றுவர அதிக ஆர்வம் காட்டியதின் விளைவு அடுத்தடுத்து குகைக்குள் விழுந்து இளைஞர்கள் பலர் உயிரிழக்க துவங்கினர். விழுந்தவர்களின் உடலை இருண்ட குகைப்பகுதிக்குள் இறங்கி கண்டெடுக்க முடியாதநிலை ஏற்பட்டது.
மூடப்பட்ட குணா குகை: உயிருடன் மீட்பது சாத்தியமில்லாத நிலையில் உடலை கூட மீட்கமுடியாத சூழல் தொடர்ந்து நிலவியதால் இந்த குகை பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கடந்த 2012 ம் ஆண்டு இரும்பு கம்பிகள் மூலம் குகை பகுதியை மூடினர் வனத்துறையினர். கிரில் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தினர்.இன்றளவும் குணா குகை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாமலேயே சுற்றுலாபயணிகள் பலர் அந்த இடத்திற்கு வெளியே நின்று பார்த்துவிட்டு சென்றுவந்தனர். ஆனால் குணா குகைக்குள் என்ன இருக்கிறது. அதன் அமைப்பு எப்படி, ஏன் உயிர் பலிகள் ஏற்பட்டன என்பதை விளக்கும் விதமாக சமீபத்தில் ஒரு கேரள படம் வெளியாகி (மஞ்சும்மல் பாய்ஸ்) அனைவரையும் கவர்ந்துள்ளது. இதையடுத்து மீண்டும் குணா குகைக்கு உலகளாவிய விளம்பரம் கிடைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த படத்தை பார்த்த பிறகு கேரளாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் குணா குகையை காண வந்து குவிகின்றனர். தமிழகத்திலும் இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் இளைஞர் மத்தியில் குணா குகையை காண ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே குணா குகையை கண்டு சென்றவர்கள் கூட இந்த படத்தை பார்த்த பிறகு மீண்டும் காண வரத்துவங்கியுள்ளனர். குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்,’ என்ற பாடலை குணா குகை பகுதியில் நின்று கோரஷாக பாடி சுற்றுலாபயணிகள் மகிழ்கின்றனர். அப்பகுதியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.
சுற்றுலாபயணிகள் கூறுகையில், "குணா குகை எப்படி இருக்கும் என்று இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக தற்போது வெளியான கேரள திரைப்படம் அமைந்துள்ளது. அந்த திரில்லை பாதுகாப்பான முறையில் அனுபவிக்கவேண்டும் என்பதே சுற்றுலாபயணிகளின் விருப்பம். இதனால் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குணா குகை பகுதிக்குள் சென்றுவர சுற்றுலாபயணிகளை அனுமதிக்கவேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT