Published : 03 Mar 2024 12:54 PM
Last Updated : 03 Mar 2024 12:54 PM

கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டத்தை உடனே கைவிட மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

வைகோ | கோப்புப்படம்

சென்னை: "கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003-ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன. சென்னைக்கும், வட தமிழகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003-ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான (attaining criticality) எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 4-ம் தேதி துவக்கி வைக்க இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ஈனுலை அமைத்து வரும் பாவினி நிர்வாகத்திடமிருந்தும் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.

2004-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2010-ம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்டு விட்டவையாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், இப்போது 2024 டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. தாமதமானதால் இத்திட்டத்துக்கான செலவு ரூ. 3490 கோடியில் இருந்து இரண்டு மடங்கு அதிகரித்து மார்ச் 2023 கணக்கின்படி ரூ. 7700 கோடியாக உயர்ந்துள்ளதாக WNISR அறிக்கை கூறுகிறது.

பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால், இந்த உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது. கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என மத்திய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. தமிழகத்துக்கு வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே திணிக்க நினைக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மத்திய பாஜக அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x