Published : 03 Mar 2024 04:00 AM
Last Updated : 03 Mar 2024 04:00 AM
சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் புகாரையடுத்து சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், ரசாயன நிறுவன அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, அரசியல் வாதிகள், அரசாங்க அதிகாரிகள், பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த மாதம் சென்னையில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
மேலும், இவ்வாறு கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமன்றி, மதுபான வியாபாரத்துக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர் என்றும், சட்ட விரோதமாக ரூ.280 கோடியை மெரீட்டியஸ் பரிமாற்றம் மூலம் பெற்று அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளனர் என அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்கள், கிரானைட் கல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் ரசாயன நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் நவீன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 பேர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், கோட்டூர்புரம், கோட்டூர் கார்டனில் உள்ள கிரானைட் விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணு என்பவர் வீடு, அலுவலகம், தி.நகரில் ரசாயன நிறுவனம் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் வீடு, அலுவலகம் உள்பட சென்னையில் 5 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை தொடர்பான எந்த ஒரு விவரங்களையும் அமலாக்கத் துறையினர் வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT