Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

தமிழை அலுவல் மொழியாக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மதுரை ஜி.ஆர். நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். ராஜமாணிக்கம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:

இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி உட்பட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மொழிகளில் இந்தி மொழி மட்டுமே தற்போது ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. இதோடு ஆங்கில மொழி துணை அலுவல் மொழியாக உள்ளது. இந்தி தெரியாத மாநில மக்களுக்கு இந்த இரு மொழித் திட்டம் சிரமமாக உள்ளது. இந்தி பேசாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தகவல் தொடர்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியுடன் சேர்ந்து அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஆங்கிலத்தை அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில உறவில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். எனவே, 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் தேசிய மற்றும் அலுவல் மொழிகளாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்ததுபோது, மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளையின் முதல் அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம். ஜெய்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், மத்திய அமைச்சரவை செயலர் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், மத்திய அலுவல் மொழி விவகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். நீதிமன்ற உத்தரவின் மூலம் எதுவும் செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர். சுவாமிநாதன் வாதிடுகையில், இந்தியாவின் அலுவல் மொழி குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் உரிய சட்டத் திருத்தம் மூலமாகவே செய்ய முடியும். நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x