Published : 02 Mar 2024 07:46 PM
Last Updated : 02 Mar 2024 07:46 PM
மதுரை: “அதிமுக ஆட்சியில் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தது. ஆனால், திமுக அரசு மதுரை எய்ம்ஸ் திட்டத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அவரது கனவுக்கு உயிர்கொடுக்கும் வகையில் மதுரையில் 224.24 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019 ஜனவரி 27-ல் பிரதமர் மோடியை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது, உடனடியாக சுற்றுச்சுவர் கட்டும் பணியும், நான்கு வழிச்சாலை இணைப்பு பணிகளும் மேற்கெள்ளப்பட்டது. திட்டச் செலவு ரூ.1,200 கோடியிலிருந்து ரூ.1900 கோடியாக உயர்ந்துள்ளது.
பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசே நிதி ஒதுக்கியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பானில் கடன் பெற்று செயல்படுத்தப்படுகிறது. மதுரையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது.
தற்போதைய நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான ஒப்பந்தம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் ஒப்புதல் கிடைக்கப்பெற்று மார்ச் மாத இறுதியில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் 224 ஏக்கர் நில எடுப்பு வேகமாக முடிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தது. திமுக அரசு மதுரை எய்ம்ஸ் திட்டத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.
மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு ஒரு கல்லை கூட தூக்கி வைக்கவில்லை. இனிமேலும் தாமதம் இல்லாமல் மதுரை எய்ம்ஸ் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். மேலும் தாமதம் ஏற்பட்டால் அதிமுக போராட்டம் நடத்தும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT