Published : 02 Mar 2024 03:35 PM
Last Updated : 02 Mar 2024 03:35 PM

“ஒன்றிய நிதியில் தமிழகம் ரூ.1-ல் திரும்பப் பெறுவது 29 பைசா தான்... உ.பி.க்கு ரூ.2.73” - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

சென்னை: “ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றி, திசைத் திருப்பி அவதூறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கூறி வருகிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக் குவியல் படிப்படியாக நடந்து வருகின்றது. ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைவதன் மூலம் முழுமையான ஒற்றை ஆட்சியை உறுதி செய்து மாநிலங்களை நகராட்சிகளைப் போல நடத்த முற்படுகிறார். மத்திய அரசின் நிதிப் பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டப்பட்டு தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய மொத்த நிதி ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி. இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூபாய் 25,495 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு ரூபாய் 5097 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 25 கோடி. ஆனால், ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 21,755 கோடி. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 89 சதவிகிதம் தான் தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தென் மாநிலங்களை பாஜக வஞ்சித்து வருவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

ஒன்றிய நிதி தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்குகிற 1 ரூபாயில் திரும்பப் பெறுவது 29 பைசா தான். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் பெறுவதோ ரூபாய் 2.73. கடந்த 10 ஆண்டுகாலமாக நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.

14-வது நிதிக்குழு தமது பரிந்துரையில் 2015 இல் வழங்கிய போது ஏற்கெனவே நிதி பகிர்வு 32 சதவிகிதமாக இருந்ததை 42 சதவிகிதமாக உயர்த்தியது. தற்போது நிதி ஆயோக் முதன்மை பொருளாதார அலுவலராக இருக்கிற சுப்பிரமணியம் அப்போது நிதித்துறை இணைச் செயலாளராகச் செயல்பட்ட போது பிரதமர் மோடி அவர் மூலமாக நிதி பகிர்வை 30 சதவிகிதமாகக் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார் என்ற செய்தி பொதுவெளியில் சுப்பிரமணியமே பகிரங்கமாக அம்பலப்படுத்தியதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்ட 15-வது நிதிக்குழு நிதி பகிர்வை அதிகரிக்காமல் 42 சதவிகிதம் தான் என்று முடிவெடுக்கப்பட்டது. அதேபோல, மத்திய அரசு வரி பகிர்வில் தான் மாநிலங்களுக்கு நிதி பகிர்வை மறுக்கிற வகையில் சர்சார்ஜ், செஸ் என்ற அடிப்படையில் வரிகளை விதித்து முழு வருவாயையும் மத்திய அரசே அபகரித்துக் கொள்கிறது.

இதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2014 இல் செஸ், சர்சார்ஜ் பங்கு 12.4 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 20 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிற மானியங்கள் 2015-16 இல் வழங்கப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 95 ஆயிரத்திலிருந்து 023-24 ஆம் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக மக்களை ஏமாற்றி, திசைதிருப்பி அவதூறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கூறி வருகிறார்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கக் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 6491 கோடி வரை விளம்பரத்திற்காகச் செலவிடப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மக்களவையில் கேட்ட கேள்விக்குப் பதிலாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருக்கிறார். இந்த தொகையை விளம்பரமாக வழங்குவதன் வாயிலாக ஊடகங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு மோடி ஆட்சியின் சாதனைகள் நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. அப்படி மீறிச் செயல்பட்டாலும் அதன்மீது அமலாக்கத்துறை ஏவிவிடப்படுகிறது. நியூஸ் கிளிக், நியூஸ் லாண்டரி, தி வயர் போன்ற சுதந்திரமான ஊடகங்களின் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான பழிவாங்கும் நடவடிக்கைக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டு ஒரு சர்வாதிகாரி போலச் செயல்பட்டு வருகிறார். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், கூட்டணி அமைத்து 2024 இல் மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.

70 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்குகிற பிரதம மந்திரி அன்னயோஜனா திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிற பைகளை 5 மாநிலங்களுக்கு வாங்க ரூபாய் 15 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் நரேந்திர மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக 70 கோடி மக்களுக்கும் வழங்கப்படுகிற உணவு தானியங்கள் நிரப்பப்பட்ட பைகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன.

மக்கள் வரிப்பணத்தை தமது சுய விளம்பரத்திற்காக பயன்படுத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதன்மூலம் மோடியின் விளம்பர அரசியல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட செய்தியில் ‘கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்” என்று கூறியதன் மூலம் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெற்று வருகிறது. இதன்மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x