Published : 02 Mar 2024 04:44 AM
Last Updated : 02 Mar 2024 04:44 AM
சென்னை/ கோவை: மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழகம் வந்துள்ள துணை ராணுவ படையினரை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னதாகவே சட்டம் - ஒழுங்கு கண்காணிப்புக்காகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், துணை ராணுவ படையினரை மத்திய உள்துறை தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதல்கட்டமாக தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில், நேற்று 15 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் கம்பெனி துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் இரவே மங்களூருவில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தனர். அவர்கள் புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி,சென்னைக்கு துணை ராணுவ படையை சேர்ந்த 2 கம்பெனி, ஆவடி, தாம்பரத்துக்கு தலா 1 கம்பெனி, கோவைக்கு 3 கம்பெனி என மொத்தம் 7 கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர். துணை ராணுவத்தினரை தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று (மார்ச் 2) காலைக்குள் 8 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படை வீரர்கள் மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருக்கின்றனர். எஞ்சியுள்ள 10 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் வரும் 7-ம் தேதி தமிழகம் வரஇருக்கின்றனர். பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அவர்கள் தேர்தல்பணியில் ஈடுபடுவார்கள். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்துமுடிந்த பிறகே, அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்துக்கு 175 கம்பெனி வீரர்கள் வர உள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் துணை ராணுவ படை வீரர்கள் தங்குவதற்கு 24 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 4 ஆயிரம் பேர் வரை தங்கும் வசதி உள்ளது.
கொச்சியில் இருந்து கோவைக்கு.. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 3 கம்பெனி மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ரயில் மூலம் கோவை வந்தனர். ஒரு கம்பெனியில் 92 பேர் என மொத்தம் 276 பேர் வந்துள்ளனர். கோவை மாநகர், கோவை சரகம்,சேலம் மாநகர் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் பிரித்து அனுப்பப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT