Published : 02 Mar 2024 05:44 AM
Last Updated : 02 Mar 2024 05:44 AM

ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்புவழக்கின் மறுஆய்வு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து தள்ளு படி செய்துள்ளது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீதுபதியப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றகிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்துசிவகங்கை மாவட்ட நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டது.

சிவகங்கை நீதிமன்றம் விடுவிப்பு: இந்நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை திரும்பப் பெறஅனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும்விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த மறுஆய்வு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ்தரப்பில், ‘‘மனுதாரர் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். இந்தவழக்கில் கீழமை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை தற்போது மறுஆய்வு செய்வதாக தெரிவித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

தலையிட விரும்பவில்லை: அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்தவழக்கின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். மேலும், இதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதால் இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்யப்போகிறோம். இருப் பினும் இந்த வழக்கை தகுதியின் அடிப்படையிலேயே உயர் நீதி மன்ற நீதிபதி விசாரிப்பார்’’ என்றனர்.

அதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் மனுவை திரும்பப்பெற அனுமதி கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x