Published : 02 Mar 2024 05:30 AM
Last Updated : 02 Mar 2024 05:30 AM

‘மண்மொழி’ இதழ் ஆசிரியர் ராசேந்திர சோழன் மறைவு: ராமதாஸ், கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: தமிழ் சிந்தனையாளரும், ‘மண்மொழி’ இதழின் ஆசிரியருமான எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற ராசேந்திர சோழன்(79) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். உளுந்தூர்பேட்டையில் 1945 டிச.17-ம் தேதி பிறந்தவர் எழுத்தாளர் ராசேந்திர சோழன். 1968-ல் ஆசிரியராகி 20 ஆண்டு காலம் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்றவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். வடதமிழக அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் இவரும் ஒருவர். தனது ‘21-வது அம்சம்’, ‘புற்றில் உறையும் பாம்புகள்’ உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் ஆர்.பார்த்திபன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.

எழுத்தாளர் ராசேந்திர சோழனின் மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்த்தேசிய பொதுவுடமைப் பார்வை கொண்டவர். தமிழ் மீது பற்று கொண்ட இவர், ஏராளமான படைப்புகளுக்கு சொந்தக்காரர். கொள்கை தளத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்

மநீம தலைவர் கமல்ஹாசன்: சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த ராசேந்திர சோழன், டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்று, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர். பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப் பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இவர், தெனாலிராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில்கூட தன் பிரத்யேக பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x