Published : 01 Mar 2024 03:16 PM
Last Updated : 01 Mar 2024 03:16 PM

“போதைப் பொருள் தலைநகரமாக தமிழகம்... ஸ்டாலின் மவுனம்!” - அண்ணாமலை விமர்சனம்

சென்னை: "தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக நமது மாநிலத்தை மாற்றியதற்காக மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், "தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக, நமது மாநிலத்தை மாற்றியதற்காக மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக (முன்னாள்) நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் மு.க.ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார். இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா?" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x