Published : 01 Mar 2024 06:16 AM
Last Updated : 01 Mar 2024 06:16 AM

கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால், ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து புதிதாக கல்லுாரிகள் தொடங்கவும், கோயில் நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மயிலாப்பூரைச் சேர்ந்தஇண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளையின் நிர்வாகியும், ஆலய வழிபாட்டுக் குழுத் தலைவருமான டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிதியில் இருந்து புதிதாக 4 இடங்களில் தொடங்கப்படும் கல்லூரிகளின் செயல்பாடுகள், இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டவை என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கோயில் நிலங்களில் அரசு நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களை அமைத்து, அதற்காக கோயிலுக்கு வாடகை செலுத்தினால், உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா?" என மனுதாரரான டி.ஆர்.ரமேஷிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், "கோயில் நிலங்களை குத்தகை அடிப்படையில் அரசு எடுத்துக்கொண்டு நியாயமான வாடகையை நிர்ணயம் செய்து, விதிகளுக்கு உட்பட்டு கல்வி நிலையங்களை தொடங்குவதாக இருந்தால் எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார்.

அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், "இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறையின் கருத்தை அறிந்து, தகவல் தெரிவிக்க அவகாசம் வேண்டும்" என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், “கல்வி நோக்கத்துக்காக அரசு இதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்தால், கோயில் நிலங்கள்ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்படும். கோயில்களுக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும்” என்றுதெரிவித்தனர். பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை 2 வாரத்துக்குள் தெரிவிக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x