Last Updated : 29 Feb, 2024 08:39 PM

2  

Published : 29 Feb 2024 08:39 PM
Last Updated : 29 Feb 2024 08:39 PM

“பாஜகவின் மாநில டீம் அதிமுக... அதிமுகவின் தேசிய டீம் பாஜக!” - உதயநிதி விமர்சனம் @ கோவை

கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவை: பாஜகவின் மாநில டீம் அதிமுக, அதிமுகவின் தேசிய டீம் பாஜக என கோவையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவின், தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம், அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று (பிப்.29) நடந்தது. இக்கூட்டத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து பேசியது: "கோவையைச் சேர்ந்த அதிமுககாரர் ஒருவரை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருந்தீர்கள்.

கத்தியை விட உங்கள் செல்போன் கூர்மையான ஆயுதமாக உள்ளது. இப்போது ட்விட்டர், முகநூல், இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் ஆகியவற்றில் பதிவு செய்தால், ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைகிறது.நம்மிடம் பெரியார், அண்ணா, கருணாநிதியின் சாதனைகள் என பேசுவதற்கு பல விசயங்கள் உள்ளன. அவற்றை மக்களிடம் கொண்டு செல்வது நீங்கள் தான். சில நாடுகளி்ல் சமூகவலைதளங்களால் ஆட்சி மாற்றம் கூட நடந்துள்ளது.

6 வருடத்துக்கு முன்பு ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சமூகவலைதளம் ஆட்டம் காண வைத்தது. 2021-ல் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினோம். நீங்கள் செய்ய வேண்டிய வேலையை பொறுப்பாக செய்ய வேண்டும். பொய்ச்செய்தியை, தவறான தகவல், தெரிந்தே பரப்புவது என இருவகை உள்ளது. இதில் பாஜக தெரிந்தே பொய் செய்திகளை பரப்புகிறது.

புயல் வந்தால், தமிழகம் பக்கம் வராதவர்கள், தேர்தல் வந்தால் வாரத்துக்கு இருமுறை வருவார்கள். முழுக்க முழுக்க பொய் செய்திகளை மட்டுமே நம்பி பாஜக அரசியல் செய்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் செய்து சிறை சென்றவர். பல்லடம் பொதுக்கூட்டத்தில் அதிமுக ஆட்சி சிறந்த ஆட்சி என பிரதமர் பேசியுள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளி எனக்கூறப்பட்டவருக்கு மலர் தூவி, ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஒரே பிரதமர் மோடிதான். திமுகவை ஒழிப்பதாக கூறியவர்கள் காணாமல் போய் உள்ளனர். கோவையில் கூவத்தூரை போல், அதிமுகவினரை தூக்கியதாக பாஜகவினரும், பாஜகவினரை தூக்கியதாக அதிமுகவினரும் கூறியுள்ளனர். உண்மையில் பாஜகவின் மாநில டீம் அதிமுக. அதிமுகவின் தேசிய டீம் பாஜக.

அதிமுக ஆட்சியில் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதிமுக வாய்திறக்கவில்லை. இப்போதும் ஆளுநரின் நடவடிக்கைக்கு வாய் திறக்கவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிதி கேட்டும் மத்திய அரசு தரவில்லை.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உடை, ஒரே கட்சி என்ற நிலை வந்துவிடும். கடந்த தேர்தலுக்கு ‘கோ பேக் மோடி’ டிரெண்ட் ஆனதை போல், இந்த முறை ‘கெட் அவுட் மோடி’ என்று கூறி்க்கொண்டு டிரன்ட் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சரும், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, இணை செயலாளர் மகேந்திரன், அமைச்சர் சு.முத்துசாமி, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x