Last Updated : 29 Feb, 2024 06:31 PM

4  

Published : 29 Feb 2024 06:31 PM
Last Updated : 29 Feb 2024 06:31 PM

“இதுதான் இவர்களின் தேச உணர்வு” - திமுக மீது தமிழிசை விமர்சனம் @ சீன ராக்கெட் விளம்பர சர்ச்சை

புதுச்சேரி: "நமது விஞ்ஞானிகள் தனது வாழ்நாளை செலவழித்து ராக்கெட் விடும் நிலையில், அந்த ராக்கெட் படத்தினை தேடி கண்டுபிடித்து போடும் முயிற்சியைக் கூட இவர்களால் செய்ய முடியாதா? இதுதான் இவர்களின் தேச உணர்வு" என்று திமுகவை குறித்து ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ராம ஜென்மபூமி கோயில் திறப்பு நினைவு தபால் தலை மற்றும் புத்தகப் பெட்டியை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அஞ்சல் வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவியிடம் இருந்து நினைவு தபால் தலை மற்றும் புத்தகப்பெட்டியை பெற்றுக் கொண்டார். அப்போது சென்னை நகர அஞ்சல் மண்டலம் அஞ்சல்துறை தலைவர் நடராஜன், புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன், புதுச்சேரி அஞ்சல் கோட்டம் கண்காணிப்பாளர் பிரபுசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: “பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அச்சமின்றி தேர்வினை எழுத வேண்டும். முடிவு எப்படி வருகிறது என்பது குறித்து கவலைப்படக்கூடாது. மகிழ்ச்சியாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் இறைவன் துணையிருப்பார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. தென்பகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர்களில் நானும் ஒருவர். பல காலமாக தென்பகுதி புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. உலக வரைபடத்தில் தூத்துக்குடி இடம்பெறப்போகிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

பிரதமர் நேரடியாக வந்து அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. தமிழக மக்களுக்கு சேவை செய்ய முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவேன் என்று அவர் சொன்னதும் மகிழ்ச்சியை தருகிறது. பிரதமர் தென்பகுதிக்கு வந்ததை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளம் பலருக்கு வேலை வாய்ப்பை தரும் என்பதுமட்டுமின்றி, ராக்கெட் ஏவுவதை சுலபமாக்கியிருக்கிறது. அதுதொடர்பாக நானே ஒரு கட்டுரையும் எழுதியிருக்கின்றேன். பிரதமர் தொடர்ந்து நல்ல வளர்ச்சி திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்து வருகிறார்.

மேலும், தெலங்கானா மாநிலத்துக்கு வரும் 4, 5 ஆகிய தேதிகளில் பிரதமர் வருகை தருகிறார். அங்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த சில திட்டங்களை திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் ஆள்பவர்கள் அரசியல் செய்து கொண்டு, பிரதமர் அரசியல் செய்கிறார் என்று சொல்வதை ஏற்க முடியாது. பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தில் ஒன்று சீன ராக்கெட், மற்றொன்று பிரதமரை தவிர ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திமுகவைச் சேர்ந்த தொண்டர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. எல்லாம் அவர்களே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சீன ராக்கெட்டை போட்டது எந்த ஈடுபாடோடு அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், எந்த தாய்நாட்டின் உணர்வோடு இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

யாரோ ஒருவரின் ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் போட்டுள்ளார்கள். நமது விஞ்ஞானிகள் எவ்வளவு நேரம் தனது வாழ்நாளை செலவிட்டு பல முயற்சிகள் செய்து ராக்கெட் விடுகின்றனர். அப்படி அவர்கள் ராக்கெட் விடும் நிலையில், அந்த ராக்கெட் படத்தினை தேடி கண்டுபிடித்து போடும் முயிற்சியைக் கூட இவர்களால் செய்ய முடியாதா. இதுதான் அவர்களின் தேச உணர்வு. இவர்களெல்லாம் தேச உணர்வோடு, நம் நாட்டு மக்களோடு நட்பாக இருக்கிறீர்களா என்பதே பெரிய கேள்வி.

வெறுமனே திராவிடம் என்று சொல்லிக்கொண்டு தேசியத்தை உதாசினப்படுத்துகிறீர்கள் என்ற உள்ளுணர்வு அங்கு வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. நம்முடைய நாட்டில், நமது விஞ்ஞானிகள் முழுமையான முயற்சிக்கு பின்பு இவ்வளவு பெரிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

பல நாடுகள் இந்தியாவின் ராக்கெட்டை பயன்படுத்த போகின்றனர். ஆனால் நம்முடைய விளம்பரத்தில் சீன ராக்கெட்டை போட்டல் எப்படி?. சீனா பகை நாடா? நட்பு நடா என்பதில்லை. உங்கள் நாட்டை நீங்கள் மதித்தீர்களா, நம் நாட்டின் விஞ்ஞானிகளுக்கு அடையாளம், அங்கீகாரம் கொடுத்தீர்களா என்பது தான் முக்கியம். ஆகவே இதனை ஏதோ ஒரு விளம்பரம் என்று விட்டுவிட்டு செல்ல முடியாது" என்று கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x