Published : 29 Feb 2024 03:31 PM
Last Updated : 29 Feb 2024 03:31 PM
சென்னை: “காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. திமுகவுடன் நாங்கள் தோழமை உணர்வோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் எந்த தொகுதி உடன்பாடும் ஏற்படவில்லை.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை. காங்கிரஸ் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உள்வாங்கிய கட்சி. ஏற்றத்தாழ்வு இல்லாத கட்சி.
திமுகவுடன் நாங்கள் தோழமை உணர்வோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை உடன்படாததால் 2014-ல் தனித்துதான் போட்டியிட்டோம். யாரிடம் கெஞ்சினோம்?
காங்கிரஸும் , திமுகவும் உண்மையான தோழமையோடு இருக்கிறது. திமுக தலைவரும், ராகுல் காந்தியும் அண்ணன் - தம்பி போல பழகி வருகின்றனர், அப்படித்தான் எங்களுடைய உறவு இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு நாங்கள் எப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பரிமாண வளர்ச்சி ஏற்படுகிறது. கூட்டணி குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நல்ல முடிவு எட்டப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன? - தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 8 தொகுதிகள் தருவதாகவும், அதில் ஒரு தொகுதியை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 12 இடங்களாவது கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவசரப் பயணமாக கடந்த திங்கள்கிழமை, கட்சி தலைமை அழைப்பின் பேரில் டெல்லி புறப்பட்டு சென்றார். உடன் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் சென்றனர். அங்கு கட்சியின்மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சிரிவெல்லபிரசாத், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்தனர். இறுதியாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த டெல்லி பயணத்தின்போது, தொகுதிகளை குறைத்து, குறைத்தே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்துவிட்டீர்கள். இந்த தேர்தலில் தமிழகத்தில் 10-க்கும் குறையாமல் தொகுதிகளை பெற வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT