Published : 29 Feb 2024 02:23 PM
Last Updated : 29 Feb 2024 02:23 PM
சென்னை: மார்ச் 1 அன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சி கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "வரும் மார்ச் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மாணவ - மாணவியர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கல்லூரி ஆசிரியராக கால் நூற்றாண்டுக் காலம் பணியாற்றிய நான் கூறுகிறேன், "இவையனைத்தும் உங்கள் வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணை மட்டுமே அன்றி உங்களைச் சோதிப்பதற்காக அல்ல" என்பதை மனதில் வைத்து, அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுமாறு வாழ்த்துகிறேன். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, அழுத்தம் கொள்ளாமல் தெளிந்த நீரோடைபோல மனதை வைத்துத் தேர்வு அறைக்குச் சென்று, வென்று வாருங்கள்.
அலைப்பேசி சாதனங்களைத் தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்தி, நேரத்தை வீணாக்காமல், தேர்வுக்குத் தெளிவாகத் தயாரித்து, தன்னம்பிக்கையோடு அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதினால் போதும். வெற்றி நிச்சயம்.
இச்சமயத்தில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாய் நின்று, அவர்களுக்குப் போதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் கொடுத்து வென்று வரும் உறுதியினை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் வெற்றிக்காக உங்கள் பெற்றோரும், ஆசிரியர்களைப் போல நானும் உங்கள் வீட்டில் ஒருவனாக, பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறேன். வென்று வாருங்கள்" என்று ஜவாஹிருல்லா வாழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT