Published : 29 Feb 2024 02:02 PM
Last Updated : 29 Feb 2024 02:02 PM
சென்னை: நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், த்ரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற இருவர் மீதான வழக்கையும் தொடர விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதே சமயம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT