Published : 28 Feb 2024 04:23 PM
Last Updated : 28 Feb 2024 04:23 PM

சேலம் அதிமுக நிர்வாகிக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஏ.வி.ராஜுவுக்கு இடைக்கால தடை

சென்னை: சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலத்துக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்க அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, கூவத்தூர் சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். மேலும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று நான் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் என் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், அதிமுகவில் இத்தனை ஆண்டு காலமாக இருந்த ஏ.வி. ராஜு இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், அதிமுகவுக்கு என்று பிரத்யேகமான பெண்கள் ஆதரவு இருந்தது. ராஜுவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜுவின் இந்த பேச்சால் எனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், ராஜுவின் பேச்சை நீக்க வேண்டும் என கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வெங்கடாச்சலத்துக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்க ஏ.வி.ராஜுவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு ஏ.வி.ராஜு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x