Published : 28 Feb 2024 09:51 AM
Last Updated : 28 Feb 2024 09:51 AM

“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” - எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்.

முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டுநினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தற்போதைய அரசியல் சூழலில்சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன.

இதற்காக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பாராட்ட வேண்டும். இல்லாததை இருப்பதைப் போலவும், இருப்பதை இல்லாதது போலவும் அவர்கள் காண்பிக்கின்றனர்.

திமுக - அதிமுக எப்போதும் ஒன்றுசேராது. அதேபோல, காங்கிரஸ்-பாஜக ஒன்று சேராது. எனவே,இதுகுறித்து எதற்கு பேச வேண்டும்? ஆனால், இதுபோல பேசவைப்பதற்காக சிலர் முயற்சிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளாக நான் ரத்த தானம் செய்து வருகிறேன். என்னைப் பற்றியும், முன்னாள் அமைச்சர் தங்கமணி பற்றியும் சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்புகின்றனர்.

அதிமுக எங்களின் தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்குத்தான் வருவார்கள். யாரும் வெளியே போக மாட்டார்கள். சுமார் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக, உலக அளவில் 7-ம் இடத்தில் உள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களை எம்எல்ஏவாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. இப்படி இருக்கையில், வெறும் 3, 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாங்கள் ஏன் சேரப் போகிறோம்? இதுபோன்ற வதந்திக்கெல்லாம் பதில் கூற வேண்டுமா? அதிமுக 35 முதல்40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சியாகும்.

எனவே, அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் இதற்கெல்லாம்பதில் சொல்ல வேண்டாம். இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார். அப்போது, எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x