Published : 28 Feb 2024 06:20 AM
Last Updated : 28 Feb 2024 06:20 AM

சிறைகளில் குழந்தைகளுக்கு உகந்த நேர்காணல் அறைகள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை, உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசுவதற்கு இடுப்பளவு சுவரின் மேல், கம்பி வலை பொருத்தப்பட்ட கட்டமைப்பு உள்ளது. இந்தக் கட்டமைப்பு வழியாக கைதிகளுடன் உறவினர்கள், வழக்கறிஞர்கள் சரியாகப் பேச முடிவதில்லை.

மேலும், சிறையில் உள்ள பெற்றோரைப் பார்க்க குழந்தைகளும் வருகின்றனர். கம்பி வலைக்குப் பின்னால் நிற்கும் தனது பெற்றோரைப் பார்க்கும் குழந்தைகள், மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

வீடுகளுக்குச் சென்ற பிறகும், சிறையில் தனது தந்தை, தாயின் நிலையை நினைத்து வருந்துகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும், குழந்தைகளுக்கு உகந்த கைதிகள் நேர்காணல் அறைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக சிறைகளில் குழந்தைகளுக்கு உகந்தவாறு கைதிகள் நேர்காணல் அறைகள் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து, உள்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி இளங்கோவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

உள்துறைச் செயலர் அபூர்வா தாக்கல் செய்த பதில் மனுவில், "தமிழ்நாடு காவலர் குடியிருப்புக் கழக தலைமைப் பொறியாளர், 9 மத்திய சிறைச் சாலை மற்றும் 5 பெண்கள் சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கு உகந்த வகையில் கைதிகள் நேர்காணல் அறைகள் அமைக்க ரூ.1.50 கோடிசெலவாகும் என்று திட்ட அறிக்கைஅளித்துள்ளார். இதற்கு விரை வில்நிதி ஒப்புதல், நிர்வாக ஒப்புதல்பெறப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

மனுதாரர் தரப்பில், "தமிழக சிறைகளில் கைதிகளாக இருக்கும் தந்தை, தாயாரை குழந்தைகள் சந்திப்பதில் தற்போது உள்ள இறுக்கமான சூழலை அகற்ற வேண்டும். இருளடைந்த, கம்பி வலையுடன் கூடிய கட்டமைப்பில் பெற்றோரை சந்திக்கும் குழந்தைகள் மனதில் மாறாத வடு ஏற்படுகிறது. அப்பாவி குழந்தைகள் அதிர்ச்சிகரமான அனுபவத்துக்கு உள்ளாகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு ஏற்ற நேர்காணல் அரங்குகள் அமைக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதையடுத்து, "தமிழக சிறைகளில் குழந்தைகளுக்கு உகந்த நேர்காணல் அறைகள் அமைக்க, தமிழக அரசு 6 மாதத்தில் நிர்வாக அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம். மனு முடிக்கப்படுகிறது" என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x