Published : 19 Aug 2014 02:07 PM
Last Updated : 19 Aug 2014 02:07 PM
தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுகவில் மட்டுமே பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான ஓட்டுரிமை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது, கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த உறுதியான தலைமை முக்கியம் என்று கருதினார். மற்ற கட்சிகளில் இருப்பதுபோல செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று கருதினார். அதனால், அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்வு செய்வது என்ற விதிமுறையை வகுத்தார்.
ஆனாலும், ஒவ்வொரு முறையும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியின்றியே தேர்வு செய்யப்படுவதால் வாக்கெடுப்பு முறைக்கு அவசியம் இல்லாமல் போனது. அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 1988, 1989, 1993, 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் 6 முறை பொதுச் செயலாளராக ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அவர் பெயரிலேயே கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்வர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் வரும் 29-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையராக கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 24-ம் தேதி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 27-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 28-ம் தேதி கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து 29-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா, 7-வது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT