Published : 27 Feb 2024 08:38 PM
Last Updated : 27 Feb 2024 08:38 PM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி 2-வது முறையாக தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை வீரபாஞ்சானில் சிறு குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் செயலாக்க திட்டக் கருத்தரங்கில் பங்கேற்று இரவு 7.05 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி புறப்பட்டார். பின்னர் அவர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் சன்னதி வாசல் முன்பு இரவு 7.32மணிக்கு வருகை தந்தார். அம்மன் சன்னதி வாசலில் பிரதமர் மோடியை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் வரவேற்றனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். இரவு 8.02 மணிக்கு தரிசனம் செய்துவிட்டு அம்மன் சன்னதி வழியாகவே கோயிலிலிருந்து வெளியே வந்தார். சுமார் அரைமணிநேரம் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து பொதுமக்களை பார்த்து கையசைத்து விட்டு தனது காரில் 8.04 மணிக்கு பசுமலையிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலைச் சுற்றியுள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்று தரிசனம் செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT