Published : 27 Feb 2024 06:38 PM
Last Updated : 27 Feb 2024 06:38 PM
சென்னை: பல்வேறு கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் பாஜகவில் இணையவிருக்கிறார்கள் என்ற செய்தி தீயாய் பரவி வர, ‘அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார். அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழக அரசியலில் பரபரப்பும் அதிகரித்துள்ளது. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் பலரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கடந்த சில தினங்களாக செய்தியாளர்களை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர், வரவிருக்கும் நாட்களில் பல முக்கிய புள்ளிகள் பாஜகவின் இணையவிருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கோவையில் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் சேரும் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி பரவி பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இன்று காலை இது தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மன் அர்ஜுணன், பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று அதிமுகவில் இணைவார்கள் என்று பேசினார். இவ்வாறு அதிமுக - பாஜகவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் ஏட்டிக்கு போட்டியாக பேசி வருகின்றனர். இதனால் மக்களும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐக்கியமாகி கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் நாங்கள் யாரையும் பாஜகவை போன்று வலை வீசி பிடிக்கவில்லை. அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார். அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அந்தக் கடைக்கு யாரும் வரகூடவில்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை. அதுதான் பிஜேபியின் கடை.
எங்களுடைய இயக்கத்தை பொருத்தவரை மக்களுக்கு தொண்டாற்றுகின்ற இயக்கம். எங்கள் இயக்கத்தில் ஐக்கியமாகிக் கொள்ள வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எதிர்காலத்தில் எங்களை நோக்கி தான் வருவார்கள், நிகழ்காலத்திலும் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யாரையும் வேவு பார்க்கவில்லை. அண்ணாமலை தான் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார். போலீஸ்காரனின் புத்தி போகுமா அது. எங்களுக்கு நிறைய பணிகள் இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT