Published : 27 Feb 2024 04:49 PM
Last Updated : 27 Feb 2024 04:49 PM

“2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இம்முறை செய்ய மாட்டார்கள்” - அண்ணாமலை பேச்சு @ பல்லடம்

படம்: ஜெ.மனோகரன்

பல்லடம்: “தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கு சென்றாலும், பாஜகவின் ஆட்சியின் சாட்சியாக மோடி, மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இந்த முறை செய்யப்போவதில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அவருக்கு முன்பாக, இக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் ஓர் அரசியல் சரித்திரத்தில் இடம்பெற்று கொண்டிருக்கின்றோம்.

இத்தனை ஆண்டு காலம் எதற்காக காத்துக்கொண்டிருந்தோமோ, அது நம் கண் முன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் 60 நாட்கள் மட்டும் தான் உள்ளது. மோடி 3-வது முறையாக 400 எம்பிக்களை பெற்று ஆட்சியில் அமரும்போது தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி 39 எம்பிக்களை கொடுத்து நிச்சயம் அழகும் பார்க்கும். இந்த யாத்திரைக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்.

பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நாம் செய்ய வேண்டியது இன்னும் பாக்கி உள்ளது. இது யாத்திரையின் நிறைவு விழா மட்டுமே. நமது பணி இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. கண் துஞ்சாமல் கடுமையாக உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஒய்வு இல்லை.

சரித்திர பொதுக்கூட்டம் இது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி பார்க்கும்போது தமிழகத்தின் அரசியல் மாற்றம் பல்லடத்தில் நடந்தது. அந்த மாற்றத்தில் பிரதமர் மோடியுடன் நாமும் இருக்கிறோம். பட்டி தொட்டி எல்லாம் பிரதமர் மோடியின் புகழ் பரவியுள்ளது.

இன்று பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள் எல்லாம் அவர் தமிழகத்துக்கு கொடுத்த திட்டங்கள். ஈரோடு மஞ்சள், தோடர் பழங்குடிகளின் சால்வை போன்றவை பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு இன்றைக்கு தமிழகத்தில் இருப்பதற்கு நரேந்திர மோடி என்ற ஒரே மனிதர்தான் காரணம். அதனால்தான் அவருக்கு ஜல்லிக்கட்டு காளை சிலை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கு சென்றாலும், பாஜகவின் ஆட்சியின் சாட்சியாக மோடி, மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இந்த முறை செய்யப்போவதில்லை.

மோடிதான் மூன்றாவது முறை ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பது தமிழகத்தில் இருக்கிற மக்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், மோடி 400-ஐ தாண்டி 450 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் இருந்து 39 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். நிச்சயம் பாஜக தமிழக மக்களோடு இருக்கும். மக்கள் கனவு காண்கிற தமிழகத்தை நாங்கள் உருவாக்கி காட்டுவோம் என்கிற சத்தியத்தை உங்கள் முன் வைக்கிறேன்" என்று அண்ணாமலை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x