Published : 27 Feb 2024 04:02 PM
Last Updated : 27 Feb 2024 04:02 PM
பல்லடம்: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி. இன்னும் சற்று நேரத்தில் மாதப்பூரில் நடைபெற்று வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று ஊகிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பிரதமர். அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளத்துக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் மாதப்பூர் வந்தடைந்தார்.
இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று ஊகிக்கப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது "பல்லடத்தில் பிரதமர் மோடி தலைமையில், மனநிறைவோடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவடைகிறது. இது நம்முடைய வருங்கால வெற்றிக்கு அடித்தளம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடன் பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்களுக்கும், பாத யாத்திரையை சிறப்பாக நடத்திச் சென்ற பொறுப்பாளர்களுக்கும், வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் நோக்கம், திமுகவினுடைய ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைச் சுட்டிக் காட்டுவதே. மேலும், மத்தியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் கீழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசின் பெரும்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. இந்த நடைபயணத்தின் நோக்கம் நூறு சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT