Published : 27 Feb 2024 02:51 PM
Last Updated : 27 Feb 2024 02:51 PM

“இரு மாநில நட்புக்கு ஏற்றதல்ல!” - பாலாற்றில் புதிய அணை கட்டும் ஆந்திரா மீது தமிழக அரசு காட்டம்

சென்னை: "பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். 1892-ம் ஆண்டின் மதராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். 1892ம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892-ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

மேலும், உச்ச நீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும், இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழக அரசு 10.02.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பாணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்புக்கு ஏற்றதல்ல. மேலும், கூட்டாட்சிக்கு எதிரானது.

ஆகையால், ஆந்திர அரசு இந்த அணைக்கட்டும் பிரச்சினை, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ள கூடாது என இருமாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x