Last Updated : 27 Feb, 2024 01:39 PM

11  

Published : 27 Feb 2024 01:39 PM
Last Updated : 27 Feb 2024 01:39 PM

“சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்.. சந்தேகம் வேண்டாம்” - திருமாவளவன் உறுதி

அரியலூர்: “சிதம்பரம் மக்களவை தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் நான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், அதன் குழுத்தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என சொல்லக் கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது. திமுக கூட்டணி, மக்களின் நல் ஆதரவை பெற்று வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும்.

திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேலாக அங்கம் வகிக்கிறோம். அதில் 2 கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கையெழுத்திட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளோம். விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம். சுமுகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும். நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொது தொகுதி.

ஆனால் எட்டு கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும், பாஜக அதிமுகவை விடுவதாக இல்லை. அதிமுகவை மூன்றாம் நிலைக்குத் தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது. இதனை ஏற்கனவே பலமுறை தெரிவித்து வந்துள்ளேன்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் நான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும், ஆந்திராவில் 3 தொகுதிகளிலும் கேரளாவில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர். எனவே தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம். தமிழகத்தில் திமுக கூட்டணியிலும், மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் போட்டியிட முயற்சித்து வருகிறோம்” என்றார்.

இதனிடையே சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் நகரில், “கண்டாவரச் சொல்லுங்க, எங்க தொகுதி எம்பியை எங்கேயும் காணவில்லை” - சிதம்பரம் மக்களவைத் தொகுதி மக்கள் என வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் இன்று அதிகாலை ஒட்டப்பட்டிருந்தன. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அனைத்து சுவரொட்டிகளும் தற்போது அகற்றப்பட்டுவிட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x