Published : 27 Feb 2024 12:34 PM
Last Updated : 27 Feb 2024 12:34 PM

பாஜகவில் இணைகிறாரா எஸ்.பி.வேலுமணி?- அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் விளக்கம்

கோவை: “முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இது அயோக்கியத்தமான முயற்சி” என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நேற்று (பிப் 26) நடைபெற இருப்பதாகவும் பாஜகவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கவில்லை. இறுதியில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான அம்மன் அர்ச்சுனன் பாஜக இணைப்பு விழா நடக்க இருந்த ஹோட்டல் அருகே இருந்துள்ளார். இதனால் அவர் பாஜகவில் சேரவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்றுமுன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை கூட்டத்துக்கு முன் பெரிய தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றார். அவரின் இந்த பேச்சை அடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம். கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான அம்மன் அர்ச்சுனன் உடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இதில் நான் விளக்கம் கொடுக்க காரணம், நானும் பாஜகவில் இணையப்போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. அதிமுக தொண்டர்களின் மனஉறுதியை குலைக்கும் வகையில் இந்த வதந்திகளை பரப்பிவருகின்றனர். இது அறமற்ற அரசியல். பாஜகவுக்கும், திமுகவுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மூன்றாம் தலைமுறை அரசியலில் வீறு நடைபோட்டு வருகிறது. நாங்கள் எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கத் தயாராகி வருகிறோம். இந்த அறமற்ற அரசியலை பாஜகவும், திமுகவும் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இது அயோக்கியத்தமான முயற்சி. 1972ல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அதிமுக குடும்பமாக எஸ்பி வேலுமணி குடும்பம் இருந்து வருகிறது. அவர் பிறக்கிற போதே அதிமுககாரராக பிறந்தார். இவ்வளவு நாட்களாக கட்சிக்காக பணியாற்றியுள்ளார். எப்படி ஜெயலலிதா தலைமையை ஏற்று செயல்பட்டோரோ, அதற்கு நிகராக தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையையும் ஏற்று எஸ்பி வேலுமணி செயல்பட்டு வருகிறார். எனவே, பாஜகவில் இணைவதாக சொல்லப்படும் சிறு பேச்சுக்கு கூட இடமில்லை. அந்த சிந்தனைக்கு கூட இடமில்லை. முழுமையாக நாங்கள் இந்த செய்தியை மறுக்கிறோம். அறம் என்று ஒன்று இருந்தால் பாஜகவும், திமுகவும் இந்த வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வடக்கில் இதுபோல் பாஜக செய்திருக்கலாம். வடக்கில் இதுபோல் செய்ததை கொண்டு இங்கும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். இது தமிழ்நாடு. இது அதிமுக. இங்கே இருக்கிற ஒரு கைப்பிடி மண்ணைக்கூட எவரும் எடுக்க முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை. லேகியம் விற்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் ஆனால் என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது” என்று விளக்கம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x