Published : 27 Feb 2024 05:54 AM
Last Updated : 27 Feb 2024 05:54 AM

அம்ருத் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் 44 ரயில் நிலையத்தை மேம்படுத்த பிரதமர் அடிக்கல்

‘அம்ருத் பாரத் நிலையம்’ திட்டத்தின் கீழ், ரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ‘2047-ல் வளர்ந்த இந்தியா, வளர்ந்த ரயில்வே’ என்ற தலைப்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன் தெற்கு ரயில் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர்.

சென்னை: அம்ருத் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் 44 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி, காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 2-வது கட்டமாக, இத்திட்டதின்கீழ், பல்வேறு மாநிலங்களில் 553 நிலையங்களை ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்த பிரதமர் மோடி, காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் 44 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், பூங்கா, பரங்கிமலை, சூலுார்பேட்டை, தருமபுரி, ஈரோடு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், பொம்மிடி, திருப்பத்துார், சின்னசேலம், நாமக்கல், கோவை வடக்கு திருவண்ணாமலை, திருவாரூர், விருத்தாசலம், கும்பகோணம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப் படுகின்றன.

இதேபோல, பழனி, திருச்செந்துார், அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி, திண்டுக்கல், துாத்துக்குடி, திருநெல்வேலி, பொள்ளாச்சி என தமிழகம் முழுவதும் 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. 24 மாநிலங்களில் 1,500 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணியையும் தொடங்கிவைத்தார். சில இடங்களில் பணிகள் முடிந்த ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதைகளை நாட்டுக்கு அர்ப் பணித்தார்.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ரூ.41,000 கோடி மதிப்பில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் விரிவாக பேசினார்.

சென்னை பரங்கிமலையில் நடந்த விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால், ரயில் பயணிகள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பொதுமக்களும் வந்து செல்லும் இடமாக மாறி உள்ளது. இதுபோன்ற திட்டங்களால், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ரயில்வே துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக நாடுகள் தற்போது இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றன. உலக பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்தை பிடிக்கும். பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன. உலக நாடுகளை ஈர்க்கும் நாடாக புதிய இந்தியா மாறியுள்ளது.

அடிப்படை வசதிகளை அரசு வழங்கினால் மக்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்வார்கள் என்பதால், அனைத்து அடிப்படை தேவைகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில், குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், “2047-ம் ஆண்டில் வளர்ந்த இந்தியா, வளர்ந்த ரயில்வே என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x