Published : 27 Feb 2024 04:54 AM
Last Updated : 27 Feb 2024 04:54 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று மாலை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி, பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று மாலை பாஜக பொதுக்கூட்டம் நடக்கிறது.இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் நேற்று மாலைபார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வேல் யாத்திரைக்கு பிறகு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்களை பெற்றதுபோல, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம், 40 எம்.பி.க்களை பெறுவோம். திமுக ஆட்சியில் ஏற்கெனவே ஓர் அமைச்சர் சிறையில் உள்ளார். ஒருவர் பதவி இழந்துள்ளார். இன்னொருவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக எந்த கட்சியையும் உடைக்கவில்லை. நாட்டை வளர்ச்சிப் பாதைக்குபிரதமர் மோடி வேகமாக கொண்டுசெல்கிறார். இதை பார்த்து மக்கள்ஆதரவு அளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மேலிட இணை பொறுப்பார் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT