Published : 27 Feb 2024 05:53 AM
Last Updated : 27 Feb 2024 05:53 AM
ராமேசுவரம்: இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும் நடை முறையை இந்த மாதம் முதல் இலங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங்களில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறையும், படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து, 4 மீனவர்கள்அந்நாட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
உண்ணாவிரதம், பேரணி: இந்த புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் மத்திய, மாநில அரசு களை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தம், பேரணி, உண்ணாவிரதம் என தொடர் போரட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவையும் புறக் கணித்தனர்.
முன்னதாக தமிழக மீனவப் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோரை சந்தித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை எழுதினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கொழும்புவில் உள்ளஇந்திய தூதரகத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
இந்திய தூதர் சந்தோஷ் ஜா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இந்திய அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டு இரு நாட்டு மீனவர்களின் நலனுக்காக மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று இலங்கைஅமைச்சரிடம் இந்திய தூதர் வலியுறுத்தினார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT