Published : 27 Feb 2024 05:45 AM
Last Updated : 27 Feb 2024 05:45 AM
சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தில், தாம்பரம்- ஆப்பூர், கோயம்புத்தூர்- வெள்ளலூர் குப்பை கிடங்குகளில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற ரூ.94.53 கோடியிலான திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகஅனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2021 அக்டோபர் 1-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம்(நகர்ப்புறம்) 2.0 தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களையும் தூய்மையாகவும் மற்றும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் மாற்றும்வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் 100 சதவீதம் திடக்கழிவுகளை அறிவியல் முறையில் தீர்வு செய்தல், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல், நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் அனைத்து தேக்கத்திடக் கழிவுகள் கொட்டும் இடங்களையும் சரிசெய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள திடக்கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் (Bio-mining) முறையில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை நிலத்தின் தன்மைக்கேற்ப நகர்வனங்களாகவோ, பூங்காக்களாகவோ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் ஆப்பூர் குப்பை கிடங்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலுள்ள பழைய தேக்கத்திட கழிவுகளை ரூ.35.99 கோடி மதிப்பீட்டிலும் கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் பத்தாண்டுகளுக்கு மேலுள்ள பழைய திட கழிவுகளை ரூ.58.54 கோடி மதிப்பீட்டிலும் உயிரி அகழாய்வு முறையில்அகற்ற மொத்தம் ரூ.94.53 கோடிக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகஅனுமதி வழங்கி உத்தரவிட்டுஉள்ளார்.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளை தூய்மையாகவும், குப்பை இல்லா நகரமாகவும் மாற்றலாம். இதன்மூலம் பசுமைவெளிகள், பூங்காக்கள், அந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT