Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

காஞ்சியில் அதிகரித்துவரும் தெரு நாய்களின் தொல்லை: நகர்நல அலுவலர் தலைமையில் பிடிப்பதற்கு குழு அமைப்பு

காஞ்சி நகரப் பகுதியில் தெரு நாய்கள் உடலில் நோய்த் தாக்குதலோடு சாலையில் சுற்றித் திரிவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக `தி இந்து’ அலுவலகத்துக்கு வாசகர் ஒருவர் `உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரையொட்டி காஞ்சி நகரில் வசிப்பவர்களிடம் விசாரித்தபோது, நகரில் வசிக்கும் பெரும்பாலானோர் நோய்களுடன் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் நகராட்சியில் அதிகரித்துள்ள தெருநாய்களால், சாலைகளில் செல்வோர் பயந்துகொண்டே நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித் திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

விபத்து உருவாகும் நிலை

பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறும்போது, “நோய்தாக்கிய தெரு நாய்கள், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களை துரத்துகின்றன. சில இடங்களில், நோய் தாக்கியதின் காரணமாக வெறிபிடித்துள்ள தெரு நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை கடிப்பதற்காக துரத்துகின்றன. அதனால், வாகனத்தில் செல்லும் நபர்கள் பயந்து நிலை தடுமாறி விபத்தில்சிக்கும் நிலை உருவாகிறது. எனவே, தெரு நாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.ஆணையர் கருத்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் விமலா கூறியதாவது:

’தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க, அவற்றுக்கு ஆபரேஷன் செய்து மீண்டும் அதே இடத்தில் கொண்டுவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஞ்சி நகரப் பகுதியில் 4,647 தெருநாய்கள் சுற்றித் திரிவதாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றைப் பிடிப்பதற்காக அரசு நிதியில் இருந்து ரூ.6.5 லட்சம் செலவில் நாய் பிடிக்கும் வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது, விரைவில் பயன்படுத்தவுள்ளோம். மேலும், தெரு நாய்களை பிடிப்பதற்கான அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தில் இல்லாததால், புளூகிராஸ் அமைப்பின் மூலம் தெரு நாய்களை பிடிக்க முனைந்துள்ளோம்.இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு தெரு நாய்களைப் பிடித்துவருகின்றனர். ஒரு தெரு நாய் பிடிப்பதற்காக ரூ.445 வழங்கப்படுகிறது. மேலும், இவ்வாறு பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, ரூ.3 லட்சம் நிதியில் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் அறுவை அரங்கு கட்டிடம் அமைக்க கட்டிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் மார்க்கெட் பகுதிவாழ் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததனால், திருக்காலிமேடு பகுதியில் தெரு நாய்களுக்கான அறுவை அரங்கு கட்டிடப் பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை மருத்துவர் ஒருவர் தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது நகர் நல அலுவலர் தலைமையில் நகரப் பகுதியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 623 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. மேலும், நகரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள 10 கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிப்பதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x