Published : 06 Feb 2018 07:53 AM
Last Updated : 06 Feb 2018 07:53 AM
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி தனது இறுதி இலக்கை நெருங்கிவிட்டது. இதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவேண்டிய மொத்த ஆதார நிதியில் இன்னும் 1 கோடி மட்டுமே தேவை என்ற உற்சாகமான உச்சக்கட்டத்தை நிதி திரட்டும் பணி நெருங்கிவிட்டதாக நிர்வாகிகள் கூறினர்.
தமிழக அமைச்சர் அமெரிக்கா வருகை
கடந்த வாரம், தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்கா வருகை தந்தார். அங்கே அவர், ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு இயக்குநர்களையும், தமிழ் இருக்கை அமையவிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கற்கைகள் துறையின் பேராசிரியர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து தமிழ் இருக்கை தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகள் நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இந்த ஆண்டு ஓர் உன்னதமான ஆண்டு. தமிழ்நாடு அரசு தனது 11 அம்சத் திட்டத்தில் தமிழ் மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றை உலகத் தமிழ்ச் சங்கம் மூலம் இணைந்து செயல்படுத்துவதற்கான ஒரு முதன்மையான செயல்திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர் மையம் மூலம் தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளில் தமிழ் கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இது தவிர, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஏனைய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் நிறுவப்படும் தமிழ் இருக்கைகள் அங்கீகரிக்கும் ஆய்வறிக்கைகளை ஒருங்கிணைக்கும் நுழைவாயில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவது என்ற யோசனையும் பரிசீலனையில் உள்ளது'' என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஒன்டாரியோ முதல்வர் பங்கேற்பு
இதைத் தொடர்ந்து ஹார்வர்டு தமிழ் இருக்கை தொடர்பான இரண்டாவது பெரிய நிகழ்வு டொராண்டோ மாநகரில் நடந்தது. கனடிய தமிழ் பேரவையின் வருடாந்தர விழாவும், தமிழ் மரபு விழாவும் கொண்டாடப்பட்டன. இதற்கு கனடா நாட்டின் ஒன்டாரியோ மாநில முதல்வர் காத்லீன் வின் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் வண்ணம் புடவை அணிந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கும் கனடிய தமிழ்ப் பேரவையில் வருடாந்தர விழாவுக்கு தன் ஆசியையும் ஆதரவினையும் தெரிவித்தார்.
பேரவையின் முக்கிய நிகழ்வாக இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளுக்கான தகுதியுரையை சிவன் இளங்கோ ஆற்றினார். ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையைத் தொடங்குவதற்காக ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கிய தமிழக மருத்துவர்கள் விஜய் ஜானகிராமன் திருஞானசம்பந்தம் ஆகிய இருவருக்கும் 'மாற்றத்துக்கான தலைமை' (Leader for Change) விருதுகள் வழங்கப்பட்டன. ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவின் இயக்குநர்களில் ஒருவரும், தமிழக ஒருங்கிணைப்பாளருமான முனைவர் மா.ஆறுமுகத்துக்கு அவருடைய சேவையைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது.
1 கோடி மட்டுமே தேவை
விருதாளர்கள் ஏற்புரையின்போது ஹார்வர்டு தமிழ் இருக்கை முன்னெடுப்பின் தொடக்க விழா கனடாவில் நடந்தைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்ததோடு விரைவில் அடுத்த கட்டமாக டொரண்டோவில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே தெரிவித்தார்கள்.
விழாவின் முடிவில் நம்மிடம் பேசினார் ஹாட்வர்டு தமிழ் இருக்கைக்குழுவின் இயக்குநர்களில் ஒருவரும் கனடா நாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எழுத்தாளட் அ.முத்துலிங்கம்.
''தமிழக அமைச்சரின் வரவும், தமிழ் இருக்கை இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளும் தமிழ் ஆர்வலர்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்தன.முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உலகத் தமிழ் மக்கள் தரும் ஒருங்கிணைந்த ஆதரவு மூலம் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய இன்னும் ஒரு கோடி மட்டுமே தேவை என்ற இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறோம்.
இந்த அரிய பணிய எங்களுடன் இணைத்து பணியாற்றி வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறும் தருணம் வந்துவிட்டது. தமிழ் இருக்கை பற்றிய தமிழ் விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச்சென்ற பத்திரிகைகள் ஊடகங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். குறிப்பாக இப்பணியை தொடக்கம்முதலே எங்களுடன் இணைந்து முன்னெடுத்துவரும் 'தி இந்து' தமிழ் நாளிதழின் பங்கேற்பு மகத்தானது. தமிழுக்கா அனைவரும் இணைந்தது தமிழின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கிறது'' என்று முத்துலிங்கம் பெருமை பொங்க தெரிவித்தார்.
கனடிய தமிழ் பேரவையின் வருடாந்தர விழா, தமிழ் மரபு விழா படங்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT