Published : 26 Feb 2024 06:34 PM
Last Updated : 26 Feb 2024 06:34 PM

ஆந்திர முயற்சியை தடுக்க உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல் @ பாலாறு

சென்னை: “தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், ஆந்திர அரசு மேற்கொள்ளும் தடுப்பணைக் கட்டும் முடிவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழகத்துக்குள் நுழையும் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. 93 கிலோ மீட்டர் பாயும் கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், 14 ஏரிகளும் கட்டப்பட்டு மொத்தம் 17 இடங்களில் பாலாற்று நீர் சேமிக்கப்படுகிறது. 33 கிலோ மீட்டர் பாயும் ஆந்திரத்தில் 22 தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள நிலையில், 222 கிலோ மீட்டர் பாயும் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகில் 1858ஆம் ஆண்டில் கட்டப் பட்ட ஒரே தடுப்பணை தான் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு உயிர் நாடியாக பல்வேறு வகைகளில் விளங்குகிறது. விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி ஆகியவை பாலாற்றின் வழியாகத் தான் அந்தந்த மாவட்ட மக்களுக்கு கிடைக்கிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில், கர்நாடகா 20 டி.எம்.சி-யும், ஆந்திரா 20 டி.எம்.சி-யும், தமிழ்நாடு 40 டி.எம்.சி-யும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என மூன்று மாநிலங்களும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

இச்சூழலில், பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 22 அணைகள் கட்டியதால், வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இச்சூழலில் மேலும் ஒரு அணை கட்ட முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அம்மாநில அரசின் இத்தகைய நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது.

எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனை அளிக்கிறது.

ஆந்திர அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் பாசனத்தை பாதிப்பதுடன், குடிநீர் தேவையையும் கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டில் பாலாற்றை நம்பியுள்ள மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே, பாலாற்றில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளால், தமிழ்நாட்டிற்குரிய நீர் கிடைப்பதில்லை. வட மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும், 4.20 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு, பாலாற்று நீரையே தமிழ்நாடு சார்ந்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவதால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால், தமிழ்நாட்டில் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

எனவே, தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில், ஆந்திர அரசு மேற்கொள்ளும் அணைக் கட்டும் முடிவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x