Published : 26 Feb 2024 05:57 PM
Last Updated : 26 Feb 2024 05:57 PM
சென்னை: தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை அரசு அமைத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற பட்டியலின இளைஞர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சாதி மறுப்பு திருமணம் புரிந்து பிரவீன் 4 மாதங்களே ஆன நிலையில் அவரது இணையரின் சகோதரன் மற்றும் நண்பர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் அனைவரும் உரிய தண்டனையை பெற்றுத்தர காவல் துறை முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமண தம்பதியர்களின் உயிர் பறிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சாதி பெருமித உணர்வு திட்டமிட்டு சாதி ஆதிக்க சக்திகளால் வளர்க்கப்படுவதும், சாதி கடந்து திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், கல்லூரியில் பயிலும் பெண்கள் காதல் வயப்பட்டு சாதிய கட்டுகளை மீறி திருமணம் செய்து கொள்வார்கள் என்ற காரணத்தால் முன் கூட்டியே படிக்கிற காலத்திலேயே திருமணம் முடித்து விடுவதுமான போக்குகள் ஏற்பட்டுள்ளன.
பெற்றோர் ஊரின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவதும் அதன் காரணமாக சொந்த மகன், மகளையே கூட எரிப்பதும், தாக்கிக் கொலை செய்வதுமான உளவியல் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலைமை நாகரிக சமுகத்தின் மீதான பெருங்கறையாகும்.
இத்தகைய சாதிய வன்மம் வளர்வதென்பது ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் உறவுகளின் நெருக்கத்தை, நிம்மதியை கெடுத்துவிடுகிறது என்பது கவலைக்குரியது. சமூக சீர்திருத்த சிந்தனைகளின் விளை நிலமாக, முன்னோடியாக திகழ்கிற தமிழ் மண் உலகின் முன் தலைகுனிந்து நிற்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் சமூகத்திற்கு திறந்த மனதுடன் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறது. இத்தகைய சாதிய வன்மங்களுக்கு எதிராக கருத்துக்கள் எழ வேண்டும். சாதி ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்படுகிற சூழலை உருவாக்க வேண்டும். ஆணவக் கொலைகளை ஈடுபடுவோர்கள் உரிய தண்டனை பெற வழக்கு விசாரணையை குறுகிய காலத்திற்குள் முடித்திட வேண்டும்.
சமூகத்தில் நிலவும் சாதிய உணர்வுகளை துடைத்தெறிந்திடும் வகையில் சாதி ஒழிப்பு பிரச்சார இயக்கத்தினை தமிழக அரசு நடத்திட முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றம் சக்தி வாகினி வழக்கில் அளித்த தீர்ப்பின்படி "பாதுகாப்பு இல்லங்களை" அனைத்து சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கிறது.
திருமணம் என்பது வயது வந்த இளைஞர்களின் தெரிவு உரிமை என்ற உயரிய எண்ணத்தை இச்சமூகத்தில் உருவாக்க அனைத்து ஜனநாயக, முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT