Published : 26 Feb 2024 04:30 PM
Last Updated : 26 Feb 2024 04:30 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நிலம் எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காரை அருகே உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு பேரணியாக வந்து முற்றுகையிட முடிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டிராக்டரில் ஊர்வலமாக செல்ல கிராம மக்கள் திங்கள்கிழமை ஏகனாபுரம் அருகே கூடினர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்ய முயன்றனர்.
போராட்டத்தை தொடங்கும் முன்பே எதற்காக வந்து கைது செய்கிறீர்கள்? என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வலுக்கட்டயமாக தரதரவென விசாயிகள், மற்றும் பெண்களை இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்னர். இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார் சுங்குவார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். அங்கு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பரபப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உள்பட அருகாமையில் உள்ள 4 மாவட்ட போலீஸாரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT