Published : 26 Feb 2024 04:06 PM
Last Updated : 26 Feb 2024 04:06 PM

உதகை அருகே எருமை மீது மோதி தடம் புரண்ட மலை ரயில் - பயணிகளுக்கு பாதிப்பு இல்லை

உதகை: உதகை அருகே எருமை மீது மோதியதால் மலை ரயில் தரம் புரண்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 220 பயணிகள் மட்டுமே இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு உதகைக்கு நீலகிரி மலை ரயில் புறப்பட்டது. காலை 10 மணிக்கு குன்னூரை வந்தடைந்தது. அங்கிருந்து 2 முதல் வகுப்பு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொது பெட்டி என 5 பெட்டிகளில் 220 பயணிகளுடன் உதகை நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில், காலை 11.50 மணியளவில் உதகை நோக்கி மலை ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது உதகை அருகே பெர்ன்ஹில்லை தாண்டி 45-வது கி.மீட்டரில் திடீரென ரயிலின் குறுக்கே வளர்ப்பு எருமைகள் தண்டவாளத்தை கடந்துள்ளன.

இதைக் கண்ட பிரேக்ஸ்மேன் திடீரென பிரேக்கை பிடிக்க, அப்போது ஏற்பட்ட உராய்வில் மலை ரயில் எருமை மீது மோதி, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ரயிலில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ரயில் மோதியதில் எருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அதிர்ச்சியில் இருந்த பயணிகளை ரயில்வே ஊழியர்கள் ரயிலிலிருந்து கீழே இறக்கி ரயில் நிலையம் அழைத்து சென்றனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீஸார் தடம் புரண்ட ரயிலை ஆய்வு செய்தனர். விபத்து காரணமாக உதகையிலிருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கிரேனை கொண்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்புறம் இஞ்சின்: நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு மலையேறி வரும் போது முன்னின்று பெட்டிகளை இழுத்து செல்வதில்லை. மாறாக பின்னிலிருந்து பெட்டிகளை முன்னோடி தள்ளிக்கொண்டு செல்லும். மிதமான 20 கி.மீ., வேகத்தில் இயங்கும் மலை ரயில் விபத்து ஏற்பட்ட போது பெட்டிகள் முன்னோக்கி வந்தன. பெட்டியில் இருந்த பிரேக்ஸ்மேன் முதலில் பிரேக் அழுத்தியுள்ளார்.

இஞ்சினில் உள்ள ஓட்டுநர் இதை உணர்வதற்குள் பெட்டி தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது. நூற்றாண்டு பழமையான நீலகிரி மலை ரயில் தடம் புரண்டது இது இரண்டாம் முறையாகும். கடந்தாண்டு ஜூன் மாதம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் சென்றதும் ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x