Published : 26 Feb 2024 09:28 AM
Last Updated : 26 Feb 2024 09:28 AM
பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கம் பகுதியில் மக்கள் மருந்தகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.நேற்று திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கு அதிகமான இடங்கள் மக்கள் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை முதல் முறையாக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் கூறியிருக்கிறார்.
மாநகரத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகிறது. இந்த நிலையை வரும் மக்களவை தேர்தலில் மாற்ற வேண்டும். பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அப்போது பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணியில் இன்னும் அதிகமானோர் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT