Published : 16 Feb 2018 02:24 PM
Last Updated : 16 Feb 2018 02:24 PM
புதுச்சேரியில் வரும் 24-ல் பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் முறைகேடுகள் தொடர்பான புகார் மனுவை ஆதாரத்துடன் அளிக்க உள்ளோம் என்று பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இன்று பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறியதாவது:
''புதுச்சேரிக்கு கடந்த 2001-ல் கட்சியின் பொறுப்பில் மோடி பாஜக நிகழ்வில் பங்கேற்றுள்ளார். தற்போது பிரதமரான பிறகு முதல் முறையாகவும், 16 ஆண்டுகளுக்குப் பிறகும் புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி ஏர்போர்ட் மைதானத்தில் வரும் 24-ம் தேதி மதியம் 2 மணிக்கு பாஜக பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி மாலை 4 மணியளவில் உரையாற்றுகிறார்.
பிரதமரின் புதுச்சேரி வருகை மாற்று அரசியல் சக்தி உருவாவதற்கு காரணமாக அமையும்.
புதுச்சேரியில் மத்திய அரசின் நேரடித்திட்டங்களுக்கு முன்னுரிமை தர பிரதமரிடம் கோருவோம். குறிப்பாக ஜிப்மர் வளர்ச்சி, ஸ்மார்ட் சிட்டி, துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களைக் குறிப்பிடுவோம். அதேவேளையில் புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முறைகேடுகள் தொடர்பான புகார் மனுவை ஆதாரத்துடன் அளிக்க உள்ளோம்.
ஊதியம் வாங்க இயலாமல் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல குடும்பங்கள் தவித்து வருகின்றன. அதே நேரத்தில் குறிப்பாக அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது இல்லத்துக்கு ரூ. 6 லட்சத்தில் நவீன கிச்சன் பொருத்தியதுடன் ரூ.18 லட்சத்துக்கு புதுப்பித்துள்ளார். அதேபோல் கமலக்கண்ணன் ரூ.19 லட்சத்தில் அரசு இல்லத்தை புதுப்பித்துள்ளார்.
வாரியத்தலைவராக உள்ள தனவேலு தனது வாகனத்துக்கு முறைகேடாக எரிபொருள் நிரப்பியுள்ளார். அதாவது 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட காருக்கு 135 லிட்டர் எரிபொருளை தினமும் நிரப்பியுள்ளார். மொத்தமாக எரிபொருள் நிரப்பியதற்கு ரூ. 1.31 லட்சத்துக்கு அதிகாரியும் ஒப்புதல் தந்து காசோலையை வழங்க அனுமதி தருகிறார். ஒப்புதல் தந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியான முறையில் செயல்படுத்தும் அரசாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி இல்லை'' என்று சாமிந்தான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT