Published : 25 Feb 2024 11:07 PM
Last Updated : 25 Feb 2024 11:07 PM
காரைக்கால்: காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டிடம், குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை கடந்த 2016-17-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்திலும், கோவில்பத்து பகுதியில் திருநள்ளாறு புறவழிச்சாலையில் உள்ள புதுச்சேரி அரசின் அன்னை தெரசா அரசு சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடத்திலும் தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில், காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்துக்காக காரைக்கால் கோவில்பத்து பகுதியில் திருநள்ளாறு செல்லும் சாலை மற்றும் காமராஜர் சாலை (விரிவாக்கம்) ஆகிய 2 இடங்களில் மொத்தம் 67.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை புதுச்சேரி அரசு ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டன.
கோவில்பத்து பகுதியில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், உயர் அதிகாரிகள், மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவையும், காமராஜர் சாலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகமும் மொத்தம் ரூ.491 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ராஜ்கோட்டிலிருந்து இன்று மாலை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராரஜன் பங்கேற்றுப் பேசியது: நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை ஒரே ஆண்டில் 8,500 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. முதுநிலை படிப்புக்கான சேர்க்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. வேறு எந்த மத்திய ஆட்சியிலும் இதுபோல நடைபெறவில்லை. இக்கல்லூரி மாணவர்கள் இங்குள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கிராமப்புற மருத்துவ சேவையை கருத்தில் கொள்ளவேண்டும். நம்மிடம் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 64 கோடி செலவிடப்பட்டுள்ளது. எவ்வளவு வசதிகள் இருந்தாலும் அது கடைகோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் முதியோருக்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும். ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகத் தரமான வகையில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதால் சில கால தாமதம் ஏற்படலாம். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையால் அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்தோர் பயன்பெறுகின்றனர். காரைக்காலில் அமையும் மருத்துவமனைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருவார்கள். கரோனா பரவல் காலத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்றுப் பேசியது: மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், நாடு வளமானதாக இருக்க முடியும். அதற்கேற்ப பிரதமர், நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவதும், உலகின் தலைசிறந்த நாடாக ஆவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது. நாட்டிலேயே புதுச்சேரி மாநிலம் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குகிறது.
மத்திய சுகாதாதாரக் குழுவினர் புதுச்சேரிக்கு வரும்போது, இங்கு சுகாதார வசதி மேம்பட்டிருப்பதை கோடிட்டுக்காட்டுவார்கள். விரைவில் காரைக்கால் ஜிப்மரில் 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமையும். அப்போது காரைக்கால் மட்டுமல்லாது, தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். புதுச்சேரி உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. மாநிலத்தில் மருத்துவ வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்றார்.
முன்னதாக ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் வரவேற்றார். காரைக்கால் ஜிப்மர் கல்லூரி டீன் குச குமார் சாஹா நன்றி கூறினார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமார், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.என்.திருமுருகன், பி.ஆர்.சிவா, ஏ.கே.டி.ஆறுமுகம், தலைமைச் செயலாளர் சரத் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பிரிவு ரூ.450 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கி, 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வின்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில் ரூ.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள, ஜிப்மர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பிரிவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். கல்லூரிக்கான கல்விக் கட்டிடம் 25 ஆயிரம் ச.மீ பரப்பளவில் 5 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 24 துறைகளுக்கான அறைகள் உள்ளன.
இரண்டு வளாகங்களிலும் அனைத்துக் கழிவுகளும் வளாகத்துக்குள்ளேயே சுத்திகரிக்கப்படுவதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட நீர், சுத்திகரிப்பு மற்றும் தோட்டக்கலை வேலைகளுக்காக பயன்படுத்தப்படும். அனைத்துக் கட்டிடங்களும் ஆற்றல் திறன் கொண்ட கிரிகா 3 ஸ்டார் மதிப்பீட்டின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT