Published : 25 Feb 2024 06:44 PM
Last Updated : 25 Feb 2024 06:44 PM
மதுரை: மதுரை அருகே முன்னாள் கல்லூரி மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்ச்சி இன்று (பிப்.25) நடைபெற்றது. மதுரை அருகே எம்ஏவிஎம்எம் ஆயிர வைசியர் கல்லூரியில் 1992 - 1995 இல் பயின்ற பிகாம் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி நாட்களைப்போல் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்து கல்லூரி பஸ்சில் ஏறி, கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தது சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
மதுரை அருகே எம்.சத்திரப்பட்டியில் எம்ஏவிஎம்எம் ஆயிர வைசியர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1992 - 1995 இல் பயின்ற பிகாம் மாணவர்கள், 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தங்கள் கல்லூரியில் சந்தித்தனர். அவர்கள் கல்லூரி நாட்களில் வகுப்புக்கு வருவதுபோல் அவரவர் பஸ்நிறுத்தங்களில் காத்திருந்து கல்லூரி பஸ்சில் ஏறி இந்த நிகழ்ச்சிக்கு வந்தது சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறைக்குள் நுழைந்து 32 வருடங்களுக்கு முன்னர் தாங்கள் அமர்ந்திருந்து படித்த வகுப்பறைகள், அமர்ந்து படித்த மரத்தடி ஞாபகங்களை மீட்டி பரவசமடைந்தனர். அதன்பிறகு கல்லூரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த தங்கள் நண்பர்களைப் பார்த்த பரவசத்தில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, நலம் விசாரித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இக்கல்லூரியில் படித்து சார்ஜா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், சேலம், சென்னை, திருச்சி, போடி போன்ற பல்வேறு நகரங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்திருந்தனர். அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பாடம் எடுத்த வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை கற்றுத்தந்த 1992- 95 ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தற்போதைய வணிக துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரை அழைத்து கவுரவித்து ஆசீர்வாதம் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடனான அந்தக் கால கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்தனர். மாணவர்களும் தங்கள் கல்லூரி வாழ்க்கையும், தற்போதைய உலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் கூறுகையில், “முன்னாள் மாணவர்கள் அமைப்பு, ஒவ்வொரு கல்லூரிக்கும் முதுகெலும்பு போன்றது. கல்லூரிக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது முதல் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கும் அவர்கள் உந்துதலாக இருப்பார்கள். அந்த வகையில் இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கு உதவ வேண்டும்.
இக்கல்லூரி கிராமப்புறத்தில் உள்ளதால் மாணவர்கள், அவர்களில் 90 சதவீதம் பெரும்பாலும் ஒரு பெற்றோர் உள்ளவர்களாகவும், பெற்றோர் இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் கல்விச் செலவை சமாளிக்க முடியாமல் கல்லூரியை விட்டு இடைநிற்கின்றனர். ஆனால், நாங்கள் அவர்களை தேடிக் கண்டுபிடித்து கல்வி கட்டணத்துக்கு ஏற்பாடு செய்து படிக்க வைக்கிறோம். இந்த சுமையை முன்னாள் மாணவர்களும் கொஞ்சும் ஏற்றுக் கொண்டால் இக்கல்லூரியும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்,'' என்றார்.
கல்லூரி நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர்கள் ஜெரால்டு, வி.ஆர்.ராமமூர்த்தி, மீனாட்சி, ஜெயகாந்தன், குமார், தாமோதரன், பழனிக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர். கல்லூரி செயலர் ஜெயராமன் மற்றும் கல்லூரிகள் உள்ளனர். காலம் பலவற்றைக் கற்று தந்தாலும் சிலவற்றை மறக்க வைத்தாலும் பள்ளிப்பருவக் காலமும் கல்லூரிக் காலமும் பசுமரத்தாணிபோல் பசுமையான நினைவுகளாக என்றென்றும் நிலைத்து இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT