Published : 25 Feb 2024 05:31 AM
Last Updated : 25 Feb 2024 05:31 AM
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட ரூ.2,465 கோடியில் 96 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டு உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட ரூ.2,465 கோடியில் முடிவுற்ற 96 திட்டங்களின் தொடக்க விழா நெம்மேலியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 96 திட்டங்களை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ரூ.1,802 கோடியில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1,516.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம், வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம் மற்றும் பழைய மகா பலிபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன பகுதிகள் என தென்சென்னை பகுதிகளை சேர்ந்த சுமார் 9 லட்சம் பேர் பயனடைவர்.
பெருகி வரும் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, நெம்மேலியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூல மாக, நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநகரம் என்ற பெருமையை சென்னை மாநகரம் அடையும்.
நகராட்சி நிர்வாக இயக்ககம் சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ரூ.172 கோடி மதிப்பிலான 52 திட்டப்பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்டுள்ள ரூ.70 கோடி மதிப்பிலான பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பேரூராட்சிகள் இயக்ககத்தில் ரூ.33 கோடி மதிப்பிலான 12 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.533 கோடியில் 3 தனி குடிநீர்த் திட்டங்களையும், 6 கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இத்துறை பயன்பாட்டுக்கென 364 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள், ரூ.648.38 லட்சத்தில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், ரூ.813 கோடியில் 23 திட்டப்பணிகள், பேரூராட்சி இயக்குநரகம் சார்பில், ரூ.238 கோடியில் திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.1,802 கோடியில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இவை எல்லாமே திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே திறக்கப்படும்.
அமைச்சர் கே.என்.நேரு, அவரைப் போலவே, அதிகாரிகளை முடுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை பிரம்மிப்பூட்டும் வகையில் மாற்றிக்கொண்டு இருக்கிறார். நகர்ப்புற மக்களுடைய அவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம், குடிநீர், சாலைகள் போன்றவற்றை முறையாக நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மிக மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக 2 முறை இருந்தவன் நான். அப்போது சென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி இருக்கிறோம். இன்றைக்கு சென்னையை நீங்கள் சுற்றி வரும்போது பார்க்கும் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டிடத்துக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடத்துக்கு “கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம்” என்று பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்.பி.க்கள் செல்வம், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாயகம் கவி, வரலட்சுமி மதுசூதனன், பாபு, அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT