Published : 25 Feb 2024 05:03 AM
Last Updated : 25 Feb 2024 05:03 AM

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் தேர்தல் ஆணையர் அருண் கோயல் உள்ளிட்ட அதிகாரிகள்.

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இரண்டாம் நாளான நேற்று,தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகியமாநிலங்களின் தலைமை தேர்தல்அதிகாரிகள் தங்களின் மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கினர். தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழக காவல் துறை டிஜிபிசங்கர் ஜிவால் மற்றும் வருமானவரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சிஆர்பிஎப் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியதாவது:

அரசியல் கட்சிகள் கோரிக்கை: தமிழகத்திலுள்ள 6.19 கோடிவாக்காளர்களில், 18-19 வயதுக்குட்பட்ட 9.18 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர். தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். ஓட்டுக்காக பணம், மது, பரிசுப் பொருட்கள் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

குறிப்பாக, தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். அதிக அளவில் சிசிடிவி பொருத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை குவிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்நடத்த வேண்டும். ஓரிடத்தில் 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்அலுவலர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் வைத்தன.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ஆகும்.

66 ஆயிரத்து 144 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 66 சதவீதம் வாக்குச்சாவடி களில் ‘வெப் காஸ்டிங்' என்ற, வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் என்ற செயலியை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் முறைகேடுகளை படம் எடுத்தோ அல்லதுஎழுத்து குறிப்பையோ பதிவேற்றம்செய்தாலே போதும். இடத்தை தேர்தல் அதிகாரிகள் அறிந்து, முறைகேடுகள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்பார்கள். இதன்மூலம் ஓட்டுக்கு பணம், பரிசுகள்கொடுப்பதை மக்களே கட்டுப் படுத்த முடியும்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் எல்லைகளை ஒட்டி வரும் 17 தமிழக மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மது, போதைப்பொருள் கடத்தல், பணப்பட்டுவாடா உள்பட எந்தவித தேர்தல் விதி மீறல்களை கண்டறிந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில போலீஸார், விமான நிலையம், ரயில்வே, வங்கி அதிகாரிகள் என 19 அமலாக்க முகமைகளுக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆன்லைன் பணப் பறிமாற்றமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் கோரிக்கைகள் ஒற்றைச்சாளர முறையில் நிறைவேற்றப் படும். வாக்குப்பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் தரப்படும். தமிழகத்துக்கு ஒரே கட்ட தேர்தல்என்ற கோரிக்கை பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். எந்தவிதமான தேர்தல் பத்திரங்கள் என்றாலும் அவை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் விருப்பம். மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தனிப்பிரிவை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பொய்த்தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x