Published : 25 Feb 2024 05:18 AM
Last Updated : 25 Feb 2024 05:18 AM
தூத்துக்குடி: மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழாமற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப். 25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக, தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். தொடர்ந்து, கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.
பின்னர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகேஉள்ள புதுக்கோட்டை பகுதியில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்த விழாவில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான பந்தல், மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேற்று ஆய்வு செய்தார்.
வரும் 28-ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடைபெறும் விழாக்கள் காரணமாக மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT