Published : 24 Feb 2024 08:01 PM
Last Updated : 24 Feb 2024 08:01 PM

திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன்

சென்னை: திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை கையெழுத்தானது.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “மக்களவைத்‌ தேர்தலில்‌, திராவிட முன்னேற்றக்‌ கழகமும்‌ - இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சியும்‌, மற்றத்‌ தோழமைக்‌ கட்சிகளும்‌ இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (24.2.2024) தொகுதி உடன்பாடுகள்‌ குறித்து திமுக‌, இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சியும்‌ கலந்து பேசியதில்‌ தி.மு.க. கூட்டணியில்‌ இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ இந்த நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ ராமநாதபுரம் தொகுதியில்‌ போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டது. பிற கூட்டணிக்‌ கட்சிகளின்‌ இறுதி தொகுதிப்‌ பங்கீட்டுக்கு உட்பட்டு இப்பட்டியல்‌ உறுதி செய்யப்படும்‌.

அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், “ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார். எங்கள் கட்சி மட்டுமல்லாமல், திமுக கட்சியினரும் அதையே பரிந்துரை செய்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், “2019-ம் ஆண்டு போட்டியிட்டது போல நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. யார் போட்டியிடுவார் என்பது குறித்து செயற்குழு முடிவெடுக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x